இலங்கையின் சுழலில் சிக்கி சிதறியது இந்திய அணி
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சேயின் சுழலில் சிக்கிய இந்திய அணி சின்னாபின்னமானது. இதனால் சற்று முன்னர் முடிவடைந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 240 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடர்ந்து 241 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோகித் சர்மா(64) மற்றும் சுப்மன் கில்(35) இருவரும் சிறந்த அடித்தளத்தை இட்டுக் கொடுத்தனர்.
இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஆதிக்கம்
எனினும் பின்னர் வந்தவர்களில் அக்சர் பட்டேல்(44) தவிர ஏனைய வீரர்களை களத்தில் நிற்கவிடாமல் வெளியேற்றினார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே.
அவர் 06 விக்கெட்டுக்களை கைப்பற்ற இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்திய அணிக்கு இலங்கை அணி நிர்ணயித்த இலக்கு
புதிய இணைப்பு
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அதன் படி, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியை பிரிதிநிதித்துவப்படுத்திய துனித் வெல்லால 35 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்ததோடு, கடைசி ஓவர் வரை நிலைத்து நின்ற கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களை பெற்றார்.
அத்துடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ 62 பந்துகளில் 40 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 42 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 101 பந்துகளில் 74 ஓட்டங்களை சேர்த்தனர்.
இந்த போட்டியிலும் இலங்கை அணிக்கு வெற்றிகரமான ஆரம்பம் கிடைக்காததால் போட்டியின் முதல் பந்திலேயே பதும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 33 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதலாம் இணைப்பு
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை(Srilanka) மற்றும் இந்திய(India) அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (4)ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்த தொடரானது, இன்று(2) பிற்பகல் 2.30க்கு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி சமநிலையில் முடிவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |