விபத்துக்குள்ளான விமானப்படை உலங்கு வானூர்தி : விமானி வெளியிட்ட தகவல்
இலங்கை விமானப்படைக்கு (Sri lanka Airforce) சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி கடந்த மே மாதம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானமை தொடர்பில் விமானி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
அதன்படி, உலங்கு வானூர்தி புறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான் பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தலைமை விமானி சாட்சியமளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
விபத்துக்கான காரணம்
உலங்கு வானூர்தி கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.
உலங்கு வானூர்தி ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.
விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
