சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளர் விவகாரம்: மைத்திரியின் முடிவை எதிர்க்கும் தயாசிறி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) அதிபர் வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) போட்டியிடுவார் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அறிவித்துள்ளமையானது நியாயமானதல்ல என சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றையதினம்(05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கியமை குறித்து நான் கவலையடையவில்லை.
மலைநாட்டு ஒப்பந்தம்
ஆனால் கட்சிக்கும் எனக்குமிடையிலான பிணைப்பை முற்றாக இல்லாமலாக்கும் வகையில் எனது உறுப்புரிமையும், முன்னாள் அதிபர் மைத்திரி பறித்தமையே எனக்கு வேதனையளிக்கிறது. எவ்வாறிருப்பினும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
கட்சியின் அங்கத்தவர்கள் அல்லாத ஒருவர் தற்போது பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். மலைநாட்டு ஒப்பந்தத்தின் மூலமே எமது நாடு காட்டிக் கொடுக்கப்பட்டது.
அதேபோன்று தற்போது மலைநாட்டு பகுதியில் உள்ள ஒருவரால் சுதந்திரக் கட்சியும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவரே புதிய தவிசாளருக்கான பெயரையும் முன்மொழிந்துள்ளார்.
பதில் தவிசாளராக நியமிப்பதற்கு சுதந்திர கட்சியில் வேண்டியளவு சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இன்று காசுக்காக கட்சி காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரி அறிவிப்பு
மே தினத்தன்று விஜயதாச ராஜபக்சவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரால் அவ்வாறு தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. அரசியல் குழு கூட்டம் கூடி தீர்மானம் எடுக்கப்பட்டு. அந்த தீர்மானம் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட பின்னரே இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும்.
ஆனால் முன்னாள் அதிபர் மைத்திரி அவ்வாறு கூறினாலும், விஜயதாச ராஜபக்ச தான் இது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை எனக் கூறுகின்றார்.
எவரிடமாவது பணம் இருக்கிறது என்பதற்காகவும், அமைச்சுப்பதவி இருக்கிறது. என்பதற்காகவும் அவருக்கு அதிபர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பளித்தால் இது நியாயமானதல்ல“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |