உள்ளூராட்சி சபைத் தேர்தல் -மகிந்த தரப்பு எடுத்துள்ள முடிவு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் முழு நாட்டினதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டி

கட்சி என்ற ரீதியில், மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து நேச கட்சிகளுடன் இணைந்து கூட்டு தீர்மானத்திற்கு வந்துள்ளோம். வர்த்தமானி அறிவித்தல் வெளியானவுடன் எங்களின் பணியை தொடங்குவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சில கலந்துரையாடல்களை நடத்தினோம். ஆனால் தற்போது மொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம். எவ்வாறாயினும், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்கள் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றன. "ஐ.தே.க. உடனான கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது. அதைத் தவிர, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. "எனினும், பேச்சுவார்த்தையும் முடிவடையவில்லை என காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மையான பிரதேசங்களில் வெற்றிபெற முடியும் என நாங்கள் நம்புகின்றோம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் அல்லது மின் கட்டண அதிகரிப்பு

"எரிபொருள் அல்லது மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் ஒரு கட்சியாக இருக்கிறோம்." முன்னாள் எரிசக்தி அமைச்சர் எரிபொருளின் விலையை உயர்த்திய போது நாங்களும் கட்சி ரீதியாக எதிர்ப்பு தெரிவித்தோம். விலைவாசி உயர்வால் மக்கள் சுமைக்கு ஆளாகாமல் பொருளாதார ரீதியில் உயரும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் எப்பொழுதும் அபிப்பிராயம் கொண்டிருந்தோம் எனவும் காரியவசம் மேலும் தெரிவித்தார்.