மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை
சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சென்றவர்கள் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரு உறுப்பினர்கள் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடம் தேர்தல்களுக்கான ஆண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
அதிபர் தேர்தல்
அரசியலமைப்புக்கமைய இந்த ஆண்டு கட்டாயம் அதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனை எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு நாம் உறுதியாக அறிவித்துள்ளோம்.
இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும்.
தேர்தலுக்கான ஆயத்தம்
இதற்கான ஆயத்த பணிகளை நாம் கடந்த 2023 ஆம் ஆண்டே ஆரம்பித்து விட்டோம்.
கட்சியின் ஸ்தாபகர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே நாம் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானத்தை மேற்கொள்வோம்.
இதே செயல்முறை அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் போதும் பின்பற்றப்படும்.
அதிபர் வேட்பாளர்
சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை நாம் தெரிவு செய்வோம். குறித்த வேட்பாளர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து, தேர்தலுக்கு முதல் நாள் வரை கட்சியின் உறுப்பினராக இருந்தவர்கள், கட்சியை விட்டு விலகி சென்றனர்.
கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறாக சென்றார்கள்.
ராஜபக்சக்களின் காலம்
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்களின் காலம் முடிந்தது என கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறினார்கள்.
எனினும், 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் குறித்த தரப்பினர் மீண்டும் கட்சியை தேடி வந்தார்கள்.
கட்சியை விட்டு செல்லும் அனைவரும் மீண்டும் தமது கட்சியை தேடி வருவார்கள்.
அரசியல் அனுபவம்
எனது அரசியல் அனுபவத்தை வைத்து இதனை கூறுகிறேன்.
தற்போது எமது கட்சியை விட்டு விலகியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை வேண்டுமானால் மீண்டும் எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
எமது தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மீண்டும் ஒன்றாக எம்மால் பயணிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |