பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு கட்டயாமாக்கப்படும் SLS சான்றிதழ்
பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முற்றிலுமாக தடை
குறித்த திகதியிலிருந்து, நிர்ணயிக்கப்பட்ட தரங்களைப் பூர்த்தி செய்யாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது, குழந்தைகளுக்குப் பால் வழங்கப் பயன்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், மாணவர்களின் மதிய உணவுப் பெட்டிகள், மற்றும் தண்ணீர் போத்தல்கள் பல்வேறு விலைகளில் சந்தையில் விற்கப்படுகின்றன.
இவற்றில் சிலவற்றிற்கு தரச் சான்றிதழோ அல்லது பயன்பாட்டிற்கு ஏற்றவை என்பதைக் குறிக்கும் அடையாளமோ இல்லை. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, சில தயாரிப்புகளில் புற்றுநோய்க் காரணிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், உணவு மற்றும் திரவங்களைச் சேமிக்கப் பயன்படும் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், அன்று முதல், குறித்த பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படும்“ என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
