சமூக வலைத் தளத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” பகிர்வு! ரிஐடிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஊடகப் பணியாளர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் இணையத்தள செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமை தொடர்பில் முன்னாள் ஊடகப் பணியாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆவரங்காலைச் சேர்ந்த முன்னாள் ஊடகப் பணியாளரான சி.ஜெயானந்தன் என்பவரே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 12ஆம் திகதி 3ஆம் மாடிக்கு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரினால் அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான இணையத்தள செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமை மற்றும் அவரின் ‘வட்ஸ் அப்’ குழு தொடர்பிலும் விசாரணைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அவரின் கைத்தொலைபேசியும் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களுடன் தொடர்புகளைப் பேணுதல், அவர்கள் தொடர்பான அடையாளங்களை வைத்திருத்தல் என்பவற்றுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர், கம்பஹா - சீதுவையில் வசிக்கும் அவருடைய உறவினர்களிடமும் இவர் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்பின்னரே அவர் கடந்த 12ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.