சிறையில் வைத்து சோமரத்ன ராஜபக்சவிடம் சாட்சியம் பதிவு : நீதியமைச்சர் அறிவிப்பு
இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச அறிவித்திருக்கும் நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் அவரை சந்தித்து அவசியமான தகவல்களைப் பெற்றிருப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்ச (Somaratne Rajapakse) விசாரணை செயன்முறைகளில் உள்வாங்கப்படுவாரா என வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ள போதே நீதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, “அண்மையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலையில் சென்று சந்தித்தாகவும், அவசியமான தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
செம்மணி மனிதப்புதைகுழி
இதற்குப் பதிலளித்த காவல்துறை திணைக்கள அதிகாரி, சோமரத்ன ராஜபக்சவின் வெளிப்படுத்தல்கள் இலங்கையின் குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் சுயாதீனத்துவம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலைமை என்பவற்றுக்கான நிரூபணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்தோடு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் சோமரத்ன ராஜபக்சவினால் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முதன்முதலாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதனையடுத்து செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் ஊடாக 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 4 உடல்கள் யாருடையவை என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை விவகாரம்
ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்று முன்தினம் (26) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, காவல்துறை திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
