செம்மணி குறித்து சிஐடியிடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன தயாரில்லை : வெளியான தகவல்
செம்மணி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச வெளியிட்ட அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் என சோமரத்னவின் மனைவி மற்றும் சகோதரி தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே சோமரத்ன ராஜபக்சவின் மனைவியான எஸ்.சி.விஜேவிக்கிரம மற்றும் சகோதரியான ரோஹினி ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டனர்.
மாணவி படுகொலை வழக்கு
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, அப்படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் என்பன தொடர்பில் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டுமொரு சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் உள்ளிட்டோருக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் சோமரத்னவின் மனைவியும் சகோதரியும் குறிப்பிட்டுள்ளதாவது, “பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியை கைதுசெய்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தனது கணவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மிகப்பாரதூரமான குற்றச்சாட்டு எனவும், அக்குற்றத்தைப் புரியாத தனது கணவர் 29 வருடகாலமாகத் தண்டனை அனுபவித்து வருதாகவும் அவரது மனைவி சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று தாம் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுப்பதாகத் தற்போது பலர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், தாம் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும், மாறாக தனது கணவருக்கும், அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏனைய நால்வருக்குமான நீதியையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச விசாரணை
அத்துடன் இவ்விடயத்தில் நாட்டுக்குள் தமக்கான நீதி கிடைக்காவிடின், தாம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியைக் கோரவிருப்பதாகவும், உள்நாட்டு அரசாங்கம் தமக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிக்காத நிலையில், தனது சகோதரர் சர்வதேச விசாரணையில் சகல விடயங்கள் தொடர்பிலும் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அவரின் சகோதரி தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி சோமரத்ன ராஜபக்சவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் என்றும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்னவின் மனைவி விளக்கமளித்தார்.
மேலும் தனது கணவர் மீதும், ஏனைய நால்வர் மீதும் சுமத்தப்பட்ட மிகமோசமான குற்றத்தை உண்மையிலேயே புரிந்தவர்கள் வெளியே சுதந்திரமாக இருப்பதாகவும், அக்குற்றத்தைப் புரியாதவர்கள் 29 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் எஸ்.சி.விஜேவிக்கிரம கூறினார்.
தற்போது தனது கணவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையையும், தமக்கான நீதியையுமே எதிர்பார்ப்பதாக சோரத்னவின் மனைவி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
