கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்
கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), சுமார் 49.44 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் அடங்கிய சூட்கேஸை பெற்றுக்கொள்ள முயன்ற 64 வயதுடைய தென் கொரிய நாட்டவர் ஒருவர், விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொழிலால் தச்சுவேலை செய்பவரான சந்தேகநபர், போதைப்பொருள் அடங்கிய அந்த சூட்கேஸைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று(01.11) பிற்பகல் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
துபாயிலிருந்து இலங்கை வருகை
சந்தேகநபர் ஒக்டோபர் 26 அன்று சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திலிருந்து துபாய்க்குப் பயணித்து, அங்கிருந்து 'பிளை துபாய்' (Flydubai) விமான சேவைக்குச் சொந்தமான FZ-579 விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொக்கைன் அடங்கிய அந்த சூட்கேஸ், அவர் இலங்கைக்குப் பயணித்த விமானத்தில் ஏற்றப்படவில்லை; பின்னர் அது வேறொரு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்
காவல்துறை மா அதிபருக்கு (IGP) கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |