ஊழியர்களுக்கு விடுமுறை கொடுங்கள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தனியார் துறை ஊழியர்களுக்குத் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தொழில் வழங்குநர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் விடுமுறை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.
தூரத்தின் அடிப்படையில் விடுமுறை
பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விடுமுறையின் நேரம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாளாகவும்,
• 40 முதல் 100 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒரு நாளாகவும்,
• 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாளாகவும்,
• 150 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்களாகவும் விடுமுறை காலத்தை சரிசெய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கும் விடுமுறை
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களாகவும் வாக்கு எண்ணும் மையங்களாகவும் வாக்குப் பெட்டிகள் மற்றும் பிற தேர்தல் தொடர்பான பொருட்களை விநியோகிப்பதற்கும் சேகரிப்பதற்கும் பாடசாலை வளாகங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
