விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத்திற்கு விசேட பாதுகாப்பு!
விசாரணைக் கைதியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) பிற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியமை, அந்தப் பணத்தை அரசியல் தேவைக்காக தனது செயலாளர் சுமதிபால லியனாராச்சியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தமை மற்றும் மூன்று இரத்தினக்கல் வர்த்தகர்களிடமிருந்து மேலதிகமாக 2.4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |