காவல்துறை மா அதிபரின் அதிகாரம் யாரிடம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்ற அறிவிப்பு
காவல்துறை மா அதிபரின் அதிகாரம் யாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதன்படி காவல்துறை மா அதிபர் தொடர்பான பிரச்சினை காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை மா அதிபரின் அனைத்து அதிகாரங்களையும் செயலாளர் வியானி குணதிலக்கவிடம் பொது பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
செயலாளரிடம் அதிகாரம்
அதன்படி தேர்தல் காலத்தில் காவல்துறை மா அதிபர் பிறப்பிக்கும் உத்தரவுகள், தேர்தல் கடமைகளுக்கு காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல், கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்தல், போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான பணம் செலுத்துதல் போன்றவை செயலாளரால் மேற்கொள்ளப்படும்.
வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த குழு திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |