கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
கொழும்பில் (Colombo) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் (May day) பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாகவே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் காவல்துறையினரின் ஊடகப் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து நெரிசல்
அந்தவகையில், கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின், அப்பகுதிகளைத் தவிர்த்து மாற்று வீதிகள் வழியாக வாகன போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மாற்று வீதிகள் பற்றிய தகவல்கள் தேவைப்படும் போது, வாகன போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்களிடமிருந்து உதவி பெறலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக தேவையான பாதுகாப்பு, வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதை பாதுகாப்பு ஆகியவற்றை உரிய முறையில் வழங்குவதற்கு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு காவல்துறை தலைமையகத்தால் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்களும் உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
