புதிய பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து
புதிய இணைப்பு
புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமராக உங்கள் நியமனம் இலங்கைப் பெண்களை அவர்களின் திறமை, வலிமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், சுகாதாரம், முதலீடு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பதவிப்பிரமாணம் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதை தொடர்ந்து நாட்டின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டிருந்த ஹரினிக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பெண் பிரதமர்
இந்த நிலையில், இந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்று நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஹரினிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறைமையில் உள்ள திறமையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளை செய்து அவை தொடர்பில் குரல் கொடுத்து அரசியலில் களமிறங்கியுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வைத்து நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |