கைதுகள் தொடரும் - சரத் வீரசேகர எச்சரிக்கை
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவு, சிஐடி மற்றும் பொலிஸாரினால் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 75 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 54 பேரில் 50 பேரை நாட்டுக்கு அழைத்துந்துள்ளோம் என்பதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபருக்கு இந்த ஆவணங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடைத்துள்ளதால் 32 பேருக்கும் எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய அவர் இரவு, பகலாக செயற்பட்டு வருகிறார்.
அதன் காரணமாக வழக்குத் தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுவதாக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதியானதல்ல. தற்போது இந்த விடயம் சட்ட மா அதிபர் கையில்தான் உள்ளது.
செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல்களின் சூத்திரதாரியான ஷேக் மொஹமட் 18 வருடங்களாக சிறையில்தான் இருக்கிறார்.
அவருக்கு எதிராக இன்னமும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ராஜிவ் காந்தியின் கொலை வழக்கின் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்க இந்தியாவுக்கு பல வருடங்கள் சென்றன.
சட்டமா அதிபர் தற்போது எடுக்கும் முயற்சியால் விரைவாக இவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார்.
அதேபோன்று நாம் முன்னெடுக்கும் விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன், ஐ.எஸ் கருத்தியலுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்