டலஸிற்கு ஆதரவு - புதிய அமைச்சரவையில் பழிதீர்த்த ரணில்!
கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸிற்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் அவர் முன்னர் வகித்த வெளிவிவகார அமைச்சுப் பதவி தற்போதைய அமைச்சரவையில், அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி புதிய அதிபர் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்ற போது, டலஸ் அழகப்பெருமவை வேட்பாளராக ஜீ.எல் பீரிஸ் முன்மொழிந்தார்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற அதிபர் தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது, ரணில் பெரும்பான்மை வாக்குகைளைப் பெற்று சிறிலங்காவின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார்.
இவ்வாறான பின்னணியில் கோட்டாபயவின் பதவி விலகலையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக பொறுப்பேற்றிருந்தார். அதன் போது, பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகத் தீர்மானித்திருந்தது.
ஆனால் ஜீ.எல்.பீரிஸ் மாறாக டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனையடுத்து அதிபர் தேர்தலில், ஜீ.எல்.பீரிஸ் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதாக கூறி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.
இவ்வாறான நிலையில், 20 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஜீ.எல்.பீரிஸ் முன்மொழிந்த டலஸ் அழகப்பெரும தோல்வியடைந்தார். புதிய அதிபராக ரணில் பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவின் கீழ், புதிய பிரதமர் தலைமையில் பழைய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியில் இருந்த ஜீ.எல்.பீரிஸ் ஒருவரைத் தவிர ஏனையோர் மீண்டும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஆகவே ரணிலை புறக்கணித்து டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தமைக்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை.
இதேவேளை, டலஸ் அழகப்பெருமவை வேட்பாளராக முன்மொழிந்த ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அதற்கு ஆதரவளித்த எவரும் இன்றைய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.