நாட்டில் இந்த வருடத்திற்குள் அச்சிடப்பட்டுள்ள பணத்தொகை!
நாட்டில் 2022 ஜனவரி 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 28 ஆம் திகதிவரையான இரு மாத காலத்துக்குள் அச்சிடப்பட்டுள்ள பணத்தொகை குறித்து முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் (Keerthi Thennakoon) தெரிவித்துள்ளார்.
அதன்படி 216, 470 மில்லியன் ரூபாவை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட பின்னர் அச்சிடப்பட்டிருக்கும் பணம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமைச்சரவை அதிகாரம் உடைய மத்திய வங்கி ஆளுநர் பதவி அமைக்கப்பட்டு, அதற்கு அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மொத்தமாக 443, 47 பில்லியன் ரூபா நிதி அச்சிடப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று முன்தினம் (28) மத்திய வங்கி அச்சிட்டுள்ள 222, 800 இலட்சம் ரூபாவுடன், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை 16 இலட்சத்தி 25 ஆயிரத்தி 240 மில்லியன் ரூபா பணம் அச்சிட்டுள்ளது.
இதனால் நாட்டுக்குள் டொலர் பிரச்சினை மாத்திரமல்லாது. செலவழிப்பதற்கு ரூபா இல்லாமல் நிதி பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் செலவீனத்தை போக்குவதற்கு தொடர்ந்தும் நிதி அச்சிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் நாட்டின் கடன் செலுத்தும் நடவடிக்கைக்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்திருக்கின்றது. ஆயினும் நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பணம் அச்சிடுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதில்லை.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கோ செலவினத்தை குறைப்பதற்கோ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது காரணமாக பணம் அச்சிடுவதற்கும், அச்சடிக்கும் பணம் உணவுத் தேவைக்கு பயன்படுத்த முடியாமல் இருப்பதால் நாட்டுக்குள் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அரசாங்கம் 31 இலட்சம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா அடிப்படையில் 1.5 பில்லியன் ரூபா பிரித்து வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
இரண்டு மாதங்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு 3.1 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
இவ்வாறு பணம் அச்சிட்டு நிவாரணம் வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.