வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் அராஜகம் - நிர்வாகிக்கு எதிராக உடனடி நடவடிக்கை!
இராகலைப் பகுதியில் வீதியோரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரிடம், தோட்ட நிர்வாகி ஒருவர் கடுமையான முறையில் அராஜகம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அராஜக செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிர்வாகி அமைச்சர் ஜீவன் தொண்டமானி பணிப்புரைக்கமைய நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகி ஒருவர் நடந்துகொண்டுள்ளார்.
உடனடி நடவடிக்கை

இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கண்டிப்பான உத்தரவின் பிரகாரமே, மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ராகலை, ஹைபோரஸ்ட் பகுதியில் பிரதான வீதியில் ஓரத்தில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன்போது அவ்விடத்துக்கு வந்த மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகி, மரக்கறி விற்பனை செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட பெண்ணை கடும் தொனியில் மிரட்டி அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
பெண்ணிடம் அராஜகம்

இது தொடர்பான காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஜீவன் தொண்டமான், நிர்வாகியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் சம்பந்தப்பட்டவரை உடன் நீக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.
இதனை ஏற்ற பெருந்தோட்ட நிர்வாகம், அதிகாரியை உடனடியாக பணி நீக்கியதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோரவும் இணங்கியுள்ளது.
மேலும் இனியும் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதெனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.