தற்போது நடைமுறையில் உள்ள மின் தடை- சிறிலங்கா வரும் சீன நிபுணர்!
நாட்டில் தொடர்ச்சியாக மின் விநியோகம் மேற்கொள்வதற்காக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தடையின்றி நிலக்கரி விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி இந்த ஆண்டு மே மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வதற்காக சீன நிபுணர் ஒருவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஜெனரேட்டரை விரைவில் சீர்செய்து 300 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மின்சார விநியோகம் தொடர்பிலான தற்போதைய நிலைமை ஓரளவுக்கு தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.