போராட்டங்களை அடக்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!
பொது மக்கள் நடத்தி வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது இரண்டு முறை சிந்தித்துப் பார்த்து செயற்படுமாறு முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அமைதியான எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அது பாதுகாப்பு படையினரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத் திடல் உட்பட நாட்டில் பல இடங்களில் நடக்கும் மக்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கடவத்தை பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் கலக தடுப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
