உயிர்த்த ஞாயிறு விவகாரம் - பிரித்தானிய காவல்துறையை நாடும் ரணிலின் திட்டம்; செவி சாய்க்காத பாதுகாப்பு அமைச்சு!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அப்போதைய பிரதமரும், தற்போதைய அதிபருமான ரணில் விக்ரமசிங்க கூறிய போதும், சிறிலங்கா அரசாங்கம், இதுவரை ஐக்கிய இராச்சிய காவல்துறை அதிகாரிகளிடம் அத்தகைய உதவியை நாடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வம் காட்டினால், உத்தியோகபூர்வ கோரிக்கையை இங்கிலாந்து காவல்துறை அதிகாரிகளிடம் விடுக்கவேண்டும்.
ரணிலின் கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை
எனினும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் அதிகாரங்களை கொண்ட, முக்கிய நிறுவனங்களான அதிபர் செயலகம், பாதுகாப்பு அமைச்சு, அல்லது பொது பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அதிபர் செயலகத்தின் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் தனக்கு தெரிந்த வகையில், அது தொடர்பில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், இந்த முனைப்பு இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் உதவியைப் பெறும் ரணிலின் திட்டம்
இவ்வாறான நிலையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து பதில் அதிபராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் உதவியைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஆகவே இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தை இறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் , ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபை, ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் இறந்த மக்களின் "இரத்தத்திலும் சதையிலும்" மற்றும் "துக்கத்திலும் கண்ணீரிலும்" அதிபர் அதிகாரத்தைப் பெற, ரணில் முயற்சிக்கிறார் என்று திருச்சபை குற்றம் சுமத்தியிருந்தது.
மக்களின் "துக்கத்திலும் கண்ணீரிலும்" அதிகாரத்தைப் பெற ரணில் முயற்சி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது ரணில் பிரதமராக இருந்ததாகவும், பிரித்தானியா காவல்துறை அதிகாரிகளின் மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த, அவருக்கு போதிய நேரமும் வாய்ப்பும் இருந்ததாகவும் திருச்சபை தெரிவித்திருந்தது.
2019, 21 ஏப்ரல் அன்று, மூன்று தேவாலயங்கள் (கடுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம்) மற்றும் கொழும்பில் மூன்று சொகுசு ஹோட்டல்கள் (சினமன் கிராண்ட், தி கிங்ஸ்பரி மற்றும் தி. ஷங்ரி-லா) என்பன தொடர்ச்சியாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகின.
அத்துடன் அன்று, தெமட்டகொடையில் உள்ள ஒரு வீடு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்குமிடம் ஆகியவற்றில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.
இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 267 பேர் கொல்லப்பட்டாதடு, 500 பேர் காயமடைந்தனர். தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் அடங்குவர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்கள்
இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள், ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹாஷிம் என்ற மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரானால் நிறுவப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் தொடர்புடையவர்களாவர்.
இவ்வாறான நிலையிலேயே, பிரித்தானிய காவல்துறையின் உதவியுடன், விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்து இப்போது ஒரு மாதம் கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.