எமது வாழ்வாதாரத்தில் விளையாடும் டக்ளஸ் தேவானந்தா - விரக்தியில் மீனவர்கள்!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது உயிரை பணயம் வைத்து தினம் தினம் இரவு பகல் பாராது கடலுக்குச் சென்று தொழில்செய்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கடல் அட்டை பிடித்து வரும் மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை பாவித்து மீனவர்கள் அல்லாத சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் அனுமதி பத்திரம் வழங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடற்தொழிலில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் திணைக்களமும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் என கூறும் சிலருக்கு குறித்த அனுமதி பத்திரங்கள் வழங்கியுள்ளமை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டக்ளஸின் ஆதரவாளர்களுக்கே அனுமதி
குறித்த மீனவர்கள் நாரா நிறுவனத்துடன் பதிவு செய்து 2013 ஆம் ஆண்டு முதல் சட்டரீதியாகவே குறித்த தொழிலினை செய்து வருகின்றனர் . குறித்த அனுமதி பத்திரத்தில் பகலில் மட்டும் தொழில் செய்யலாம் என்ற நிபந்தனை அடிப்படையில் இருக்கின்ற காரணத்தினால் பகல் நேரம் மாத்திரமே மீனவர்கள் செய்துவந்த போதிலும் டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரத்தை பயன்படுத்தி இரவு நேரத்திலும் அட்டைத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த அமைச்சரின் நடவடிக்கை காரணமாக கடற்தொழிலை நம்பி வாழ்கின்ற மீனவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலை இழந்து காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
இதுவரை காலமும் நேர்த்தியாக மீனவர்களுக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி வந்த மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரி மற்றும் மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் தாங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் விரக்தியில்
டக்ளஸ் தேவானந்தா மீது வடக்கு கிழக்கு மீனவர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து கொண்டு வருகின்ற நிலையிலும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கையில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றமை மீனவர்கள் மத்தியில் கடும் விரக்தியை உண்டு பண்ணியுள்தாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்களமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடன் நடவடிக்கை எடுத்து தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
