வீழ்ச்சி அடைந்த பொருளாதாரமற்ற யுகத்திற்கு மீண்டும் செல்ல முடியாது : அதிபர் ரணில்
தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று (03) இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” அதிபர் கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்ல்,
“நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதோடு, கைவினைத் துறையை அந்நிய செலாவணி ஈட்டும் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும்.
2023ஆம் ஆண்டு கைவினைத் துறையில் திறமையை வெளிப்படுத்தியவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிய நெருக்கடி காரணமாக இந்த விருது விழாவை நடத்த முடியாமல் போனது.
ஆனால் இந்தக் கண்காட்சியில் கலைஞர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை பாணிகளை மட்டுமன்றி மேற்கத்திய பாணிகளையும் பயன்படுத்தி நாம் பயனடைய வேண்டும். அதை இந்தியா ஏற்கனவே வெற்றிகரமாக செய்து வருகிறது. அதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஏற்றுமதி துறை
இந்த திட்டங்கள் ஊடாக நாட்டின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி துறையில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதித் தொழிலில் இருந்து விலகிச் செயல்படுவது இன்று ஒரு நாடாக நமக்கு மிகவும் கடினமான விடயமாகும்.
அதனாலேயே எதிர்காலத்தில் இந்த கைவினைத் துறையை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது .
நாங்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்துள்ளோம். அந்த இக்கட்டான நேரத்திலும் எப்படியாவது நாட்டின் வருமானத்தை பெருக்கினோம். அதற்காக அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். 2022 ஆம் ஆண்டில், நமது நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்தது.
சுற்றுலாத் துறை
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது தடைப்பட்டது. இந்த கைவினைத் துறை சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நமது பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 2022 இல் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்பதை கூறியிருந்தோம். அதன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்ட வேண்டியிருந்தது.
அதனால்தான் நட்டத்தில் இயங்கும் துறைகள் அனைத்தையும் இலாபகரமான துறைகளாக மாற்றி சில நிவாரணங்களை குறைக்க நேரிட்டது.
அதன்படி கடந்த வருடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற்றம் காண முடிந்தது. கடந்த வருடத்தின் கடந்த 02 காலாண்டுகளின் முன்னேற்றம் மற்றும் இந்த வருடத்தின் 04 காலாண்டுகளின் முன்னேற்றம் குறித்து நாம் இப்போது கவனம் செலுத்தி, இந்த வருடம் 2% பொருளாதார வளர்ச்சியை அடைய திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை எட்டினால், அடுத்த ஆண்டில் 5% ஆக அதனை அதிகரிக்க முடியும். எனவே இந்த பொருளாதார வளர்ச்சியுடன் நாம் முன்னேற வேண்டும். நாம் உடன்பாட்டுடன் செயல்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு
நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சடித்துக் கொண்டிருந்தது தான் எமக்கிருந்த பாரிய பிரச்சினையாகும். அத்தோடு வங்கிகளில் கடன் பெற்றதனால் ரூபாயின் பெறுமதி மேலும் சரிந்தது. அரசாங்கத்தின் தேவைக்காக வங்கிகளில் கடன் பெற்று இரண்டு அரச வங்கிகளும் வீழ்ச்சியடையும் நிலைக்கு தள்ளப்பட்டன.
எனவே, வங்கிகளில் கடன் பெற மாட்டோம் எனவும் பணத்தை அச்சிட மாட்டோம் என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மேற்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே அரசின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியின் ஊடாக 12% வருமானம் பெற வேண்டும். அதனை 15% இலக்குடன் நிறைவு செய்யவேண்டியுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் 15% வருமானத்தைப் பெற முடிந்தால் பொருளாதார ரீதியாக முன்னேறும் பலம் நமக்கு உண்டு.
நமக்கு பணத்தை அச்சடிக்க முடியாமலும், வங்கிகளில் கடன் பெற முடியாமலும் இருந்தால், அரச வருமானத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி.
வற் வரி
அதன்போது வற் வரியை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. அதன்படி, வற் வரி 15% இல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது. மேலும், வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட பல பொருட்கள் வற் வரியின் கீழ் கொண்டு வரப்பட்டன.
அதன் மூலம் தற்போது நமக்குத் தேவையான வருமானம் கிடைக்கின்றது. இதனால், ரூபாயின் பெறுமதி வலுவடைகிறது. கடினமானாலும் அந்தச் சுமையை நாம் அனைவரும் சுமக்க வேண்டியுள்ளது.
இந்த வழியில்தான் நாம் சிரமத்துடனேனும் செல்ல வேண்டும். அதை கைவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மக்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களையும் வழங்குவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குதல், “அஸ்வெசும” நன்மைகளை மூன்று மடங்காக அதிகரித்தல், மக்களுக்கு இலவச காணி உறுதிகள் வழங்குவது உள்ளிட்ட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும், எதிர்காலத்தில் மேலும் நிவாரணம் வழங்கப்படும். இந்த வழியைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சிலர் பணத்தை அச்சிடுமாறும் வங்கிகளில் இருந்து கடன் பெறுமாறும் கூறுகிறார்கள். அப்படிச் செய்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாது.
இந்தப் பயணத்தில் சிரமங்கள் இருந்தாலும், ஆண்டின் இறுதியில் ரூபாவின் பெறுமதி வலுவடையும். எனவே, இது ஒரு பிரபலமான வேலைத்திட்டம் அல்ல. இதனைத் தவிர வேறு வழியில்லை. யாரேனும் நமக்கு சலுகை பெற முடியும் என்று கூறினால் அதனை முன் வந்து அறிவிக்க வேண்டும்.
அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதையும் அவர்கள் அறிவிக்க வேண்டும். எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சி அடைந்த பொருளாதாரமற்ற யுகத்திற்கு எமக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. கடினமாக இருந்தபோதிலும், நாடு இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது.
கடந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்படி அத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, எதிர்காலத்தில் ஏனைய துறைகளில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இருப்பினும், இந்த நேரத்தில் ரூபாவின் பெறுமதியை குறைக்க விரும்பவில்லை.
பொருட்களின் விலை
உக்ரைன் போர் நடைபெறுகிறது. காசா போர் உள்ளது. அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கலாம். செங்கடலில் கப்பல்கள் மீது ஹூதி குழுவினர் நடத்தும் தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் செங்கடல் ஊடாக பயணிக்காமல் தென்னாப்பிரிக்காவின் ஊடாக சுற்றி வந்தால் அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
எனவே, ஹூதி நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடலுக்கு அனுப்ப உடன்பட்டுள்ளோம்.
ரூபாவை வலுப்படுத்தி, சரியான பொருளாதார திட்டத்துடன் முன்னேறினால், விரைவாக முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது.
மேலும், இந்த கைவினைத் துறையும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறையாக மாற்றப்பட வேண்டும் என்பதையும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |