அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது முடியாது என்ற கூக்குரலையல்ல!
தமது சுமைகளையும் நாட்டை அழிக்கும் அரசியல்வாதிகளின் சுமைகளையும் தற்போது மக்கள் சுமக்க நேரிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலி இனிந்தும, நாகொடமுலன ஸ்ரீ ஆனந்தராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மக்களின் துன்பங்களை புரிந்துகொள்ளாத அரசங்கம், மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு மக்களின் துன்பங்கள் தொடர்பில் எவ்வித பொறுப்பும் இல்லை.
மக்களின் எதிர்பார்ப்பு இதுவே
இலக்கை அடையும் வேலைத்திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளன. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும். அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது தீர்வுகளையே அன்றி, முடியாது என்ற கூக்குரலை அல்ல.
இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு கிடைத்தது அரசியல் நடிப்பு மாத்திரமே. இரண்டு பக்கங்கள் எரியும் விளக்குகள் போல் இரண்டு யுத்தங்கள் நடைபெற்ற நாட்டை பொறுப்பேற்ற ரணசிங்க பிரேமதாச, இயலாமை மற்றும் முடியாது என்று கூறாது வேலைகளை செய்தார்.
மக்களின் துன்பத்தை பயன்படுத்தி தமது மடியை நிரப்பும் அரசாங்கம்
வேலை செய்ய முடியவில்லை என்று கூறுவதற்கு பதிலாக வேலைகளை செய்து காட்டினார்.
ஆனால் தற்போது முழு நாடும் அனர்த்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் வரிசைகளில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது, நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி அதிகாரத்தை கைப்பற்றிய ஆட்சியாளர்கள், குளிரூட்டிகளை போட்டுக்கொண்டு யோகா பயிற்சி செய்கின்றனர்.
மக்களின் துன்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் தனது மடியை நிரப்பிக்கொள்ள முயற்சித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
