தற்காலிக ஆசுவாசப்படுத்தலை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது- கடுமையாக வலியுறுத்தும் எதிர்க்கட்சி!
இலங்கையில் உள்ள சகல விவசாயிகளுக்கும் ராஜபக்ஷ அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் உள்ள 22 லட்சம் விவசாயிகள், ராஜபக்ஷ அரசாங்கத்தின் புத்திசாலித்தனமற்ற தீர்மானம் காரணமாக பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் என்ற சொல்லில் அரசாங்கம் பிழை விட்டிருப்பதை ஏற்றுக்கொண்டிருப்பது புலனாகிறது.
தமது பிழைகளை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதன் மூலம் செய்த பிழையினை சரி செய்துவிட முடியாது.
இதன் மூலம் தற்காலிகமாக விவசாயிகளை ஆசுவாசப்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்றுள்ளது. இது மிகப் பெரிய பிரச்சினை. இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். நாட்டில் இப்படி ஒரு விவசாய பேரழிவு மீண்டும் ஏற்படாத வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எட்ட வேண்டும்.
அரசாங்கம் வழங்குகின்ற நிவாரணம் தொடர்பில் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெறுமனே நெல் உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து சகல விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
மரக்கறி உற்பத்தியாளர்கள், தேயிலை ஏற்பத்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அழிவுகளைச் சந்தித்துள்ள விவசாய குடும்பங்கள் இன்றும் கஸ்டப்படுகின்றனர்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் உணவிற்கும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாட்டு மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிரச்சனையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
