சுரேன் ராகவன் உள்ளிட்ட பலரின் பதவிகள் பறிப்பு - மைத்திரி அதிரடி!
சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவால், அதிரடியாக பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், அரசாங்கத்தில் இணைந்து அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பதவிகள் அனைத்தும் பறிப்பு
சுதந்திரக்கட்சியை சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, சாந்த பண்டார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஷ்பகுமார, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில், இவர்கள் சுதந்திரக்கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, சாரதி துஷ்மான மித்ரபால, ஷான் விஜேலால் டி சில்வா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தொடர்ந்தும் சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
