சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்ற எதிரணி மறுப்பு
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச நாடாளுமன்ற தேர்தல் திருத்தங்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசிலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைக்கான ஆதரவு
சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட விரோதமான உத்தேச நாடாளுமன்ற தேர்தல் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று ஆதரவுடன் நிறைவேற்ற கட்டாயம் எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை. எனினும், அதற்கு நாம் வழங்க மாட்டோம்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நாம் ஆதரவு வழங்காவிட்டால் கட்டாயம் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்பட்டால் நாம் வெற்றி பெறுவோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் நாம் அரசாங்கத்தை அமைப்போம். அந்த அரசாங்கத்தின் பிரதமராக எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம்” என்றார்.
