கடன் பொறிக்குள் சிறிலங்கா!! அம்பலப்படுத்தினார் எதிரணி எம்.பி
சர்வதேசத்திடம் சிறிலங்கா பெற்றுக்கொண்டுள்ள கடன்களில் அடுத்த 12 மாதங்களில் ஏழாயிரத்து 242 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
எனினும், சிறிலங்காவின் கையிருப்பில் இரண்டாயிரத்து 581 மில்லியன் அமெரிக்க டொலர்களே காணப்படுவதாகவும், எஞ்சிய தொகையை அரசாங்கம் எவ்வாறு செலுத்தப்போகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாட்டில் அரச நிதி குறித்த பாரிய நெருக்கடி நிலையொன்று காணப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச கடன்களைச் சமாளிக்க குறுகிய காலத்தில் 54 ஆயிரத்து 900 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அரசின் மொத்த வருமானமானது 79 ஆயிரத்து 800 கோடி, எனினும் மொத்தச் செலவீனமானது ஒரு இலட்சத்து 150 கோடியாகவுள்ளது.
நல்லாட்சியில் அறுபது மாதங்களுக்கு ஐயாயிரத்து 400 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் மூவாயிரத்து 750 பில்லியன் ரூபாய் கடனைப் பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த அரசாங்கம், தனிநபரின் கடன்களை மேலதிகமாக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்துள்ளது.
நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 28 வீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களை மாத்திரம் விமர்சித்துக்கொண்டு இருக்காது டொலர் பெறுமதியை தக்கவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.