இணையத்தள சைபர் தாக்குதலுடன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு தொடர்பா?
இலங்கையில் இன்றைய தினம் நடத்தப்பட்ட இணையத்தள சைபர் தாக்குதலுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏதேனும் தொடர்பு காணப்படுகின்றதா என .LK இணையத்தள பதிவு நிறுவனத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் கிஹான் டயஸிடம் கொழும்பு ஊடகமொன்று வினவிய நிலையில் மே மாதம் நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கும், இன்றைய தினம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், இணையத்தளங்களுக்குள் ஊடுருவி, விடுதலைப் புலிகளுக்கு சார்பாக தகவல்களை காட்சிப்படுத்திய போதிலும், இன்றைய தினம் அவ்வாறான ஒன்றும் இடம்பெறவில்லை.
இணையத்தள முகவரியை, வேறு இணையத்தளங்களுக்கு செல்லும் வகையிலேயே இன்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.
அதனால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேளை இன்றையதினம் .lk என முடிவடையும் இணையத்தளங்கள் பல செயலிழந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.