கிறீஸ் பிசாசுகளை உருவகிக்கும் எதிர்க் கட்சி- பாரிய குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆளும் தரப்பு!
பற்றிப்பிடிக்க எதுவுமில்லாது இருக்கும் எதிர்க்கட்சி, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டமை தவறான செயல் என காரணம் காட்டி மக்களை தவறாக வழிநடத்துகிறது என ஆளும் தரப்பு குற்றம் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு - ஹொரணை வீதியில் போகுந்தர பாலம் மற்றும் நான்கு வழித்தடங்கலை கொண்ட வீதி நிர்மணிப்பு ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Jhonston Fernando) இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைய போகிறது என்பது எதிர்க்கட்சி புதிதாக உருவகப்படுத்தியுள்ள பிசாசு என தெரிவித்துள்ளார். மேலும் “கொவிட் வைரஸ் பரவிய காலத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. உலகில் இலங்கையில் மட்டுமே இப்படியான எதிர்க்கட்சி இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை தவறானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கிரியெல்ல கூறுகிறார். நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவும் நேரத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டவரப்பட கூடாது என அவர் கூறுகிறார். அப்படியான அரசியல் நெருக்கடி என்ன என நான் கேட்கின்றேன்.
1947 ஆம் ஆண்டு முதல் 50 தடவைகள் இவ்வாறு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது புதிய விடயமல்ல. சஜித் பிரேமதாசவின் தந்தையும் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைத்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாத்திரமல்ல நாடாளுமன்றத்தை மூடி ஆசனங்களில் பன்றி எண்ணெயை பூசினார். இது உலகில் எங்கும் இல்லாத எதிர்க்கட்சி. கிறீஸ் பிசாசுகளை உருவகித்து வருகின்றனர். கொவிட்டுக்கும் பேயை உருவகப்படுத்தி காட்டினர்.
இப்போது அவர்களின் புதிய பிசாசு பொருளாதார வங்குரோத்து என்பது. நாடு வங்குரோத்து நிலைமைக்கு செல்ல அரச தலைவரோ, பிரதமரோ, நிதியமைச்சரோ இடமளிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு கூறுகிறேன். அச்சம் கொள்ள வேண்டாம், உங்களை எமது அரசாங்கம் பாதுகாக்கும்” என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.