கொழும்பில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள்! விசாரணைகளை ஆரம்பிக்க முடிவு
அரசாங்கத்திற்கு சொந்தமான மாளிகைகளை போராட்டகாரர் சேதப்படுத்தியுள்ள நிலையில், சேதத்துக்குள்ளான சொத்துக்களின் பெறுமதி தொடர்பான கணக்காய்வை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தினால் அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகையில் கணிசமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
போராட்டகாரர் மீது விசாரணை

இந்த அழிவுகள் சம்பந்தமாக திணைக்களம், அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது. இந்த செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தொல்பொருள் கட்டளைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
கடந்த ஒன்பதாம் திகதி சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் உச்சம் பெற்ற நிலையில், அன்றைய தினம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அதிபரின் செயலகம் என்பன கைப்பற்றப்பட்டன.
எனினும் அதற்கு முன்னர் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகை மற்றும் செயலகத்திலேயே தங்கினர். அவர் பதவி விலகும் வரை அங்கிருந்து நகரப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர்.
இதன்போது அங்கிருந்த அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும், சில பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையிலேயே தற்போது விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.