வியக்கவைக்கும் தாமரை கோபுரத்தின் வருமானம்! 20 நாட்களிலேயே இலட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனை
கடந்த இருபது நாட்களாக தாமரை கோபுர முகாமைத்துவம் 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
தாமரை கோபுரத்தில் இருந்து பங்கீ ஜம்பிங் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
பயணச்சீட்டுகள், நிகழ்வுகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்த வருமானம் வருமானம் பெறப்பட்டள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, இதுவரை 127,300 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டிருந்தார்.
சீனா அரசாங்கத்தின் நிதியுதவி
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வணிக நடவடிக்கைக்காக திறக்கப்பட்டது.
சீனா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்து நீண்ட காலம் சென்றுள்ள நிலையில், அதனை திறக்கும் நடவடிக்கை தாமதமாகி உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி திறக்கப்பட்டது.
தாமரை கோபுர நுழைவு கட்டணமாக இலங்கை மக்களுக்காக 500 ரூபாய் மற்றும் நாட்டு மக்களுக்கான வரம்பற்ற கட்டணம் 2000 ரூபாயாகும்.
அதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் ஆகும்
பொதுமக்களின் பாவனைக்காக தாமரை கோபுரம் திறக்கப்பட்ட பின்னர் முதல் நாள் வருமானம் 15 லட்சத்தை அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.