மகிந்த ராஜபக்சவுக்கு எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி!
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று காலை மகிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மஹிந்தவின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கான தூதுவராக செயற்பட்டமையை மகிந்த ராஜபக்ச இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
மகிந்த விடுத்த கோரிக்கை
இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு மகிந்த ராஜபக்ச, எரிக் சொல்ஹெய்ம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்போது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே உதவிகளை வழங்கும் என எரிக் சொல்ஹெய்ம், மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளின் இணை செயற்பாடுகள்
நோர்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

