அதிரடியாக பதவி நீக்கப்பட்ட சுசில் - கைமாறும் பதவி!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வகித்து வந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார். அவர் அண்மைய காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார் என்ற காரணத்திற்காகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், நாட்டின் பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவுக்கு புரையோடி போயுள்ளதாகவும் வேறு ஒரு அணியிடம் நாட்டை ஒப்படைத்தாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே சுசில் பிரேமஜயந்த வகித்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு பதவி, எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.பி.திஸாநாயக்க தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.