தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் எனவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனடிப்படையில், பிரதமர் பதவி விலகினால், அமைச்சரவையும் கலைந்து விடும். இதன் பின்னர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரத்திற்குள் பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களாக 10 பேரை மாத்திரம் நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மற்றும் அமைச்சரவையை விசேட சபையின் மூலம் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் நடைபெற்றது. எது எப்படி இருந்த போதிலும் புதிய பிரதமர் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவராக இருப்பார் என்றே பேசப்படுகிறது.
இதன்படி டளஸ் அழகப்பெரும பெரும்பாலும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும், சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணியினரும் டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.