அரச அடக்குமுறை தொடர்ந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்..!வெளியாகிய எச்சரிக்கை
மக்கள் எழுச்சி
சமூக செயற்பாட்டாளர்கள் மீதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீதும் அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் மீண்டும் பாரிய மக்கள் எழுச்சி போராட்டங்கள் உருவாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது , இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவற்றை உதாசீனப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது அதிபராக பதவியேற்றதன் பின்னர் அவர் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களுக்கு முரணான விடயங்களையே செய்து கொண்டிருக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடக்குமுறை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதன் ஊடாக அரசாங்கம் எதனை எதிர்பார்க்கிறது? சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமும் இலங்கையின் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மனசாட்சியை காட்டிக் கொடுப்பவர்களாவர். இந்த அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சர்வதேசமும் அதனையே கூறுகிறது.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு அரசாங்கத்திற்கு எந்தவொரு சர்வதேச அமைப்புக்களும் உதவ முன்வரப்போவதில்லை. இந்த அரசாங்கம் அடக்குமுறைகளைப் பிரயோகித்து , ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுமானால் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் மீண்டும் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும்.
தற்போதுள்ள அரசாங்கத்தால் ஒருபோதும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது. நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி மக்களின் குரலை முடக்கி விட முடியாது எனவும் தெரிவித்தார்.
