புனர்வாழ்வு என்ற போர்வையில் இளைஞர்களை சித்திரவதை செய்து சிறையில் அடைக்க முயற்சி! சஜித் சீற்றம்
ராஜபக்ச குடும்பத்தின் அனுசரணையுடன் ஆட்சிக்கு வந்த அதிபர் தலைமையிலான அரசாங்கம், தற்போது மக்களின் இன்னல்களுக்காக குரல்கொடுக்கும் இளைஞர் யுவதிகளை புனர்வாழ்வு என்ற போர்வையில் அவர்களை சித்திரவதை செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வியலுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோழைத்தனமான அரசாங்கம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்கள் அதிகாரத்திற்கு, மனித சமூகத்திற்கு, மனித ஒன்றுகூடல்களுக்கு, இளைய தலைமுறையின் ஒன்றிணைவுகளுக்கு பயப்படும் கோழைத்தனமான அரசாங்கம்
பாதுகாப்புப் படையினரை புடை சூழ்ந்து, ஆயுதமேந்தி இளைஞர்களை கேவலமான முறையில் ஒடுக்குகிறது, அவர்கள் மனித குலத்தின் பசி வேதனைகள் குறித்துக் கூட அற்பமேனும் பொருட்படுத்துவதில்லை வன்முறை மற்றும் அரச மிலேச்சத்தனம் அவர்களுக்கு அன்றிலிருந்தே பரிச்சயமானது.
இந்த மிலேச்சத்தனத்திற்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும், முடிந்தால் அடக்குமுறையைத் தொடரவும் அதற்கு நீண்ட ஆயுள் இல்லை.
இந்த அரச அடக்குமுறையும், வன்முறையும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும்.
புனர்வாழ்வு பணியகம்
தற்போதைய அரசாங்கம் புனர்வாழ்வு பணியகம் என்ற புதிய நிறுவகத்தை நிறுவுவதன் மூலம் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை கைது செய்து, புனர்வாழ்வளிக்க முயற்சிக்கிறது.
உண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என சகலரையும் அழித்த ராஜபக்ச தலைமுறையினர்கள்.
ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் அனுசரணையுடன் ஆட்சிக்கு வந்த அதிபர் தலைமையிலான அரசாங்கம், தற்போது மக்களின் இன்னல்களுக்காக குரல்கொடுக்கும் இளைஞர் யுவதிகளை புனர்வாழ்வு என்ற போர்வையில் அவர்களை சித்திரவதை செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர் " எனக் குறிப்பிட்டார்.
