தெற்காசியாவில் இரண்டாவது இடம்பிடித்த இலங்கை
2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் சதவீதத்தின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, 2022ஆம் ஆண்டில் இலங்கையில் குழந்தைகளின் போசாக்கு மட்டம் மோசமடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை
2022 ஆம் ஆண்டில், இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே எடை குறைந்த குழந்தைகளின் சதவீதம் 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2021ல் 12.2 சதவீதமாக இருந்தது.
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரமும் உயரத்திற்கு ஏற்ற எடையும் இல்லாதவர்களின் சதவீதம் முறையே 9.2 சதவீதம் மற்றும் 10.1 சதவீதம் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
2021 ஆம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகளின் சதவீதம் 7.4 சதவீதமாக உள்ளது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் சதவீதம் 8.2 சதவீதம்.
பொருளாதாரப் பிரச்சினைகளினால் சிறுவர் போஷாக்கு
இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகளினால் சிறுவர் போஷாக்குக் குறைபாட்டு நிலைமை அதிகரித்துள்ளதாகவும், பல மாவட்டங்களில் சிறுவர் போஷாக்குக் குறைபாடு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிக எடை குறைந்த குழந்தைகளில் 23.9 சதவீதம் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் சதவீதம் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 9.8 சதவீதமாகும்.
முதலிடத்தில் நுவரெலியா
குழந்தைகளில், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகளில் அதிக சதவீதம் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இது 22.8 சதவீதமாகும். குறைந்த சதவீதமான 5.1 வீதம் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
போசாக்கு முரண்பாடுகளை எதிர்த்து ஒன்றிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படாவிட்டால், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இந்த முரண்பாடுகள் மேலும் மோசமடையும் என மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
