படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்கள்: சமூக செயற்பாட்டாளர் ஆதங்கம்
44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் இனப்படுகொலைகளாகவே காணப்படுவதுடன் இதற்கான நீதி கிடைக்க போராட வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ராமநாதன் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் (Trincomalee) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் வழக்கு அறிக்கை வெளியீடு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பூட்ரோஸ் காளி ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கையினை கோரிய போது குறித்த அறிக்கையில் ஒரு இனத்தின் தனி மனிதனை முக்கியமாக தேர்ந்தெடுத்து கொள்வதும் இனப்படுகொலையாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு இனத்தின் முக்கியமானவர்களை தனித் தனியாக தேர்ந்தெடுத்து செய்வது இனப்படுகொலையாகத்தான் கருத வேண்டும். இனப்படுகொலைக்கான சட்டமும் இனப்படுகொலைக்கான நீதியும் அவர்களுக்கு உரித்தானது என்பது தவிர்க்க முடியாத பிரயோகத்திற்குள் வருகின்றது.
நிமலராஜனின் கொலை அதுபோன்ற ஊடகவியலாளர்கள் 44 பேரின் கொலை அனைத்துமே தமிழினப்படுகொலையின் ஒரு கூறாகவே இந்த இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
விசாரனை அறிக்கை
அவருடைய விசாரனை அறிக்கை இவ்வளவு காலத்துக்கு பிறகு வெளிவருவதென்பது ஒரு உண்மையை நோக்கிப் போராடுகின்ற ஒரு மனிதனின் மரணமும் அவருடைய சாவின் பின்னும் போராட்டத்தை முன்நகர்த்தும் என்பதற்கு மிக முக்கியமானதொரு ஆதாரமாக மிக முக்கியமான செய்தியாக இந்த கனத்தில் இங்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏன் நாங்கள் போராடுகின்றோம் ஏன் இவ்வளவு இந்நிகழ்வை செய்கின்றோம் என்றால் சுயநிர்ணய உரிமைகளுக்காக முன் நகரக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
ஏன் இந்த சுயநிர்ணய உரிமை முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் பன்னாட்டு சட்டத்தின் பொருளின் படி பொருள் கோரலின் படி இந்த பன்னாட்டு சட்டத்தினை கையகப்படுத்த வேண்டியவர்களாக அல்லது பன்னாட்டு சட்டத்தின் கீழ் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவர்களாக உலக நாடுகள் மட்டுமே கருத்திற் கொள்ளப்பட வேண்டிய நிலையில் ஏனைய பன்னாட்டு சட்டப் பொருள்களாக ஒரு இனம் கருத்திற் கொள்ளப்பட வேண்டுமாக இருந்தால் அந்த இனம் சுய நிர்ணய உரிமைக்காக தன்னுடைய தன்னாட்சிக்காக எங்களை பொருத்தமட்டில் போராடுகின்ற இனமாக இருந்தால் மட்டுமே அது பன்னாட்டு சட்டத்தின் சரத்துக்களை தரம் குறித்தாக்கி கொள்ளும் பண்பை கொண்டிருக்கின்றது.
சுயநிர்ணய உரிமை
ஆகவே இந்த உலகத்தில் நாங்கள் பன்னாட்டு சட்டத்தை எங்களுக்காக செயற்பட வைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் சுயநிர்ணய உரிமைக்காக ஏதோ ஒரு வழியில் போராட தலைப்பட்டவர்களாக போராட முன் நகர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே தமிழினம் பன்னாட்டு விசாரணையை கோருவதற்கான ஆகக் குறைந்த தகுதியை கொண்டிருக்கின்றது.
ஆகவே இவ்வாரான போராட்டங்கள் மரணித்தவர்களை கொல்லப்பட்டவர்களை இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நாங்கள் நினைவேந்துகின்ற இந்த போராட்டங்கள் கூட ஒரு இனத்தின் தன்னாட்சி சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமாக கருதப்படுவதோடு அதன் ஊடாகவே நாங்கள் பன்னாட்டு சட்டத்தை எங்கள் மீது பிரயோகிக்கத்தக்க வலுக்கொண்டவர்களாக மாற்றுவதற்கான இந்த முயற்சியின் ஒரு படியினை நாங்கள் இங்கு தாண்டுகின்றோம்.
இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களை நாங்கள் என்றென்றைக்கும் நினைவு கொள்வோம் என்றும் இனப்படுகொலைக்கான நியாயத்தை வேண்டி போராடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
