ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் , இலங்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக Tier 2 தரநிலையைத் தக்கவைத்துள்ளதாக தேசிய மனிதக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு (NAHTTF) தெரிவித்துள்ளது.
மனிதக் கடத்தலால் பாதிக்கப்படுபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரித்தல் போன்ற அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தத் தரநிலை பிரதிபலிப்பதாக அப்பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் முக்கிய முன்னேற்றமாக, 2026 முதல் 2030 வரையிலான காலப்பகுதிக்கான மனிதக் கடத்தலைக் கண்காணித்து ஒழிப்பதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய மனிதக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதக் கடத்தலை எதிர்கொள்வதற்கான நாட்டின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், உரிய சேவைகளுக்கு அவர்களைப் பரிந்துரைத்தல் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மாவட்ட மனிதக் கடத்தல் தடுப்பு மன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், சர்வதேசப் பங்காளிகளுடனான ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் இணையவழிச் சுரண்டல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சேர்ப்பு செய்தல், கட்டாயக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துதல் போன்ற வளர்ந்து வரும் மனிதக் கடத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இயங்கும் தேசிய மனிதக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு, தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும் விசாரணைகள், வழக்குத் தொடருதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வகைப்பாட்டின்படி, Tier 2 என்பது மனிதக் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்சத் தரநிலைகளை ஒரு நாடு முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அதனை நோக்கி குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் குறிக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |