இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்ட வெற்றிக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ஜெர்மனியில் ரணில் இடித்துரைப்பு
இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் ஆரம்பமான பர்லின் உலக மாநாட்டில் உரையாற்றிய அவர், 2030 ஆம் ஆண்டளவில் குறித்த திட்டத்தை நிறைவு செய்ய இந்த நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரண்டையும் குறைந்த நிதியைக் கொண்டு கையாள வேண்டிய நிலையில் இலங்கை தற்போது இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதி
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கடன் நெருக்கடி, கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகப் பொருளாதாரம் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன வரலாற்றின் எந்த கால கட்டத்திலும் இது போன்ற நெருக்கடியை உலகம் சந்தித்ததில்லை என அவர் கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள பணவீக்கம், எண்ணெய் பீப்பாய்களின் விலை 100 அமெரிக்க டொலர்களை நோக்கிச் செல்வது மற்றும் உலகளாவிய மத்திய வங்கிகளின் பண நெருக்கடி போன்றவற்றை தற்போது அனைவரும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி இந்த வருடம் இதுவரையில் அதிகரிக்கவில்லை என்பது இதற்கொரு சிறந்த உதாரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.