வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 63.8% குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
சுங்க திணைக்களத்தினால் (Sri Lanka Customs) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு மே 31ஆம் திகதிக்கு இடையில் 1014 பில்லியன் ரூபா வரவுசெலவுத் திட்ட இடைவெளி காணப்பட்டதாகவும் இந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வரவு செலவுத் திட்ட இடைவெளி 366 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சுங்கத்துறை
முறையான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி நகர்ந்ததன் விளைவாகவே இந்த நிலையை அடைய முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை சுங்கத்துறையானது அரசாங்கத்தினால் வழங்கப்படும் வருமான இலக்குகளை எப்பொழுதும் பூர்த்தி செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வாகனங்களின் இறக்குமதி
அதன்படி, 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1537 பில்லியன் ரூபா வருமான இலக்கில் 708 பில்லியன் ரூபா வருமானத்தை ஏற்கனவே பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தலேயே சுங்கத்துறையினர் அந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து வருவது விசேட அம்சமாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |