யாழில் போராட்டத்தில் குதித்த டெலிகாம் ஊழியர்கள் (படங்கள்)
சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தினை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நிறுவனத்தின் யாழ்கிளை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில், சிறிலங்கா டெலிகொம் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமையும் (22) 9 ஆவது நாளாக தொடர்கின்றது.
சிறிலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்புப் போராட்டம்
இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் சிறிலங்கா ரெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது.
சிறிலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய வெகுமதிகள், மேலதிக கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்காமல் இருப்பதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
கோரிக்கைகள் தொடர்பில்
மேலும், நேற்றைய தினம் (21) கூடிய பணிப்பாளர் சபை, தமது கோரிக்கைகள் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கவில்லை என இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்திருந்தார்.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து , தேசிய வளங்களை விற்பதை நிறுத்து , பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.