படுகொலைகள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பா - உண்மையை வெளிப்படுத்திய பிள்ளையான்!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் முக்கிய கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான சம்பவங்கள் தொடர்பில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பில் பிள்ளையானை தொடர்புகொண்டு வினவியபோதே, வெளியான தகவல்களை மறுத்துள்ளார். அதுமட்டுமன்றி அரசியல் தஞ்சம் கோருவதற்காக எவரும், எதனையும் கூறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
முற்றாக மறுக்கும் பிள்ளையான்
இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. எனவே அதுபோன்ற ஒரு நிகழ்வாக இந்த தகவலும் இருக்கலாம் என்று பிள்ளையான் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகள், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உட்பட்ட முக்கிய தகவல்களையே, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் குறித்த உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
