இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்
இந்த ஆண்டில் (2024) பெப்ரவரி மாதத்தில் வருகைதந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 218,350 ஆக உயர்வடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 க்கும் அதிகமான வருகைகளைக் குறிக்கும் மூன்றாவது மாதமாக இது அமைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே காலப்பகுதியில் சென்ற ஆண்டு (2023) 107,639 சுற்றுலாப்பயணிகள் இதே காலப்பகுதியில் வருகை தந்ததாகவும், இது ஒப்பீட்டளவில் 100% அதிகமாகவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ள ஆண்டாக இது காணப்படுகிறது, 2020ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 228,434 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களும் ஆச்சரியமூட்டும் வகையில் அமைவதாகவும் , 29 நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வருகையுடன், அமைச்சுப்பதவியை பொறுப்பேற்ற பின்னர் இதுவரை இல்லாத அதிகபட்ச வருகைகள் பதிவாகியிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுற்றுலா வருமானம்
2024 ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் மொத்தமாக, 426,603 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது, இது ஏற்கனவே 2023 இல் பதிவான மொத்த வருகையில் 28% ஆகும்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் சுற்றுலா வருமானம் 710 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |