ஒப்ரேஷன் துவாரகா..!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக பிரபாகரன் மனைவி, மகள் உள்ளடக்கியதாக ‘‘ஒப்ரேஷன் துவாரகா ’’ என்ற பெயரில் விசாரணை நடவடிக்கையை புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த தவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும், நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொட்டு அம்மான் உயிரோடு...
இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நெடுமாறனின் இந்த அறிவிப்பு மூலமாக உறுதி செய்துள்ளன.
இவ்வாறான நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற அறிவிப்பு இலங்கை அரசியல் போக்கினை தலைகீழாக மாற்றும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில், பிரபாகரனின் தளபதியும், விடுதலைபுலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரோடு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் பிரபாகரன் மரணம் என்ற அறிவிப்பு பொய்யாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொட்டு அம்மானும் பிரபாகரனும் ஒன்றாக வெளியேறி இருக்கலாம் எனவும், முன்னதாகவே பிரபாகரன் மனைவி, மகள் வெளியேறி இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மகள் துவாரகா
எனவே பிரபாகரனின் சகோதரர் டென்மார்க்கிலும், சகோதரி கனடாவிலும் உள்ளமையினால் அவர்களுடைய தொடர்புகளும், நடவடிக்கைகளும் முற்று முழுதாக கண்காணிக்கப்பட்டு பின்னர் பிரபாகரனும், அவரது மனைவி மகளும் உள்ள இடத்தினை அடையாளம் காண திட்டமிடப்பட்டிருக்கலாம் எனவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அவரது தலைமையிலான அரசியல் போராட்டங்களை சர்வதேசம் விரும்பாது என்பதனால் பிரபாகரன் மகள் துவாரகாவை முன்வைத்து ஒரு அரசியல் இயக்கம் அல்லது தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கலாம் என புலனாய்வு அமைப்பினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ளக்கூடிய சுந்தரி என அறியப்பட்ட பேராசிரியர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈழப்போரின் இறுதி காலத்தில் 2006 முதல் 2009 வரை இலங்கையில் முகாமிட்டு புலிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் பதுங்கு குழிகளையும் படம்பிடித்து பகிர்ந்து கடமையாற்றியவர் என்றும் கூறப்படுகின்றது.