அதிகரித்துள்ள வெப்பநிலை: எச்சரிக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்!
தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின்(Jaffna Teaching Hospital) பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்றையதினம்(6) யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த ஹீட் ஸ்ட்ரோக்(Heat stroke) மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.
வெப்பநிலை அதிகரிப்பு
எனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பது நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும். குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக்
கடந்த இரு வாரங்களில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில்அனுமதிப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.
இந்த நோய் வராமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும். தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பழம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும்.
வயது போனவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து ஹீட் ஸ்ட்ரோக் வாராமல் தடுக்கமுடியும்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |