ஆபத்தான அடித்தளத்தை உருவாக்கிய இலங்கையர்கள் - சுகாதார தரப்பு கடும் எச்சரிக்கை
இலங்கையில் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் நேற்றுமுன்தினம் டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற கொண்டாட்டங்கள் காரணமாக நாட்டில் ஒமைக்ரோன் தொற்றின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டங்கள் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே, பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண (Upul Rohana) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் பதில் வழங்கிய அவர், “புதுவருடப் பிறப்பு மற்றும் நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடிய விதத்தை பார்க்கும் போது மிகவும் அதிருப்திகரமாக இருந்தது.
அரசு மற்றும் சுகாதார அமைச்சு விடுத்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படவில்லை. கொரோனா வைரசினால் 18 லட்சம் தொற்றாளர்கள் கடந்த வாரம் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தானது.
இலங்கையில் ஒமைக்ரோன் தொற்று பரவல் ஆதிக்கம் செலுத்தும் என்று நாம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம். தற்பொழுது அதற்கான அடித்தளத்தை மக்கள் ஏற்படுத்தி விட்டனர்.
ஆகவே இதன் பாதிப்பாக எதிர்வரும் நாட்களில் ஒமைக்ரோன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை மற்றுமொரு தொற்றுநோய் நிலைமை உருவாகும்.
இனியாவது சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள் என நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்கள் விரைவாக அவற்றை செலுத்திக்கொள்ளுங்கள், பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் மாத்திரமே இதன் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.