மக்களின் அனுமதிக்காக காத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் - பிரதீப் உந்துகொட எம்.பி
கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற இரணைதீவு மக்கள் அங்கு ஒரு பகுதியிலேனும் புதைப்பதற்கான அனுமதியை ஓரிரு தினங்களில் வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், கொவிட் உடல்களை புதைக்கின்றமைக்கான அனுமதி தொடர்பில் பல பேச்சுக்கள் இந்த நாட்டிற்குள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களில் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை அரசியல் உயர்பீடம் எடுக்கவில்லை. தொழில்நுட்பக்குழு மற்றும் சுகாதாரத்துறையின் நிபுணர்குழுவினரே அப்பரிந்துரையை வழங்கியது. அந்த வகையில் உடல்களை புதைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர்.
இருப்பினும் அந்தப் பிரதேசத்தை மக்கள் வழங்க முன்வராவிட்டால் அதற்குப் பதிலாக மாற்றுப் பிரதேசங்களை தெரிவுசெய்து அடக்கம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவோம் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நேற்று தெரிவித்திருந்தார்.
உடல்களை புதைப்பது மக்களின் உரிமை என்று கூறுகின்றார்கள். அதனை உறுதிசெய்ய அரசாங்கம் என்கிற வகையில் அதற்கான செலவீனத்தையும் நாங்கள் ஏற்கின்றோம் என்றார். இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட இளைஞர் முன்னணியின் தலைவர் புத்திக்க விக்ரமாதர, ”இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களும் இந்த நாட்டிற்கு உரித்தானவர்களே. அவர்களை நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.
கொவிட் உடல்களை அடக்கம் செய்ய இரணைதீவு பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்கள்.
எனினும் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான பகுதியளவிலான அனுமதியை அப்பிரதேச மக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இல்லாவிட்டால் ஆள்நடமாட்டம் இல்லாத தீவில் கொவிட் உடல்களை புதைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.